கொடநாடு கொலை வழக்கில் முக்கிய திருப்பம்.! மனோஜ் சாமி நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!
தமிழகத்தையே பதற வைத்த கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் சாமியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
2014 ஆம் வருடம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள கொடநாட்டு பங்களாவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது பங்களாவின் காவலாளியான ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த சயான் மற்றும் கனகராஜ் மனோஜ் சாமி உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் தலைமை காவல் அதிகாரியான ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் காவல்துறையினர் வழக்கில் தொடர்புடைய 12 குற்றவாளிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரளாவைச் சார்ந்த சயான் என்பவரிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அவரது வாக்குமூலத்தை மலையாளத்தில் எழுதிக் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமியிடம் விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது .
இதனைத் தொடர்ந்து கொடநாடு வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் சாமி சிபிசிஐடி அலுவலகத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவரான மனோஜ் சாமி அங்குள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.