கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு..! விரைவில் கைது செய்யப்படுவாரா..!
கர்நாடக மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இருந்து வருகிறார். இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில்பார்வதாயிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால், முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது விசாரணை நடத்துவதற்கு, கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். ஆளுநர் தனது அதிகாரத்தை சட்டத் துக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, ‘ஊழல் தடுப்பு சட்டம் 17 (ஏ) பிரிவின் கீழ் ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நில விற்பனையாளர் தேவராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக இன்று மைசூரு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, "இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யாக ஜோடிக்கப்பட்டது. பாஜகவும் மஜதவும் என்னை கண்டு பயன்படுகின்றன. எனக்கு பயம் எதுவும் கிடையாது. காங்கிரஸ் மேலிடமும், மாநில எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து செயல்படுவேன். மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்'' என்று கூறினார்.
இந்நிலையில் இந்த மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஆணைப்படி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு காரணமாக கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!