நோட்...! குரூப் 2 தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு இது கட்டாயம்...! அதிரடி உத்தரவு
குரூப் 2 தேர்வு எழுதவரும் தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய அவர்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வரும் 14.09.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 தேர்வர்கள் எழுத உள்ளனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 162 தேர்வு கூடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி இத்தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு நடைபெறும் 14.09.2024 அன்று காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாக வருகைபுரிவதால் தாங்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறை மற்றும் தங்களுக்கான இருக்கைகளை முன்னதாகவே அறிந்து கொண்டு தேர்வினை சிறந்த முறையில் எழுதிட வாய்ப்பாக அமையும்.
மேலும், இத்தேர்வினை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடங்களைக் கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதவரும் தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் துாய்மையாகப் பராமரித்திடவும், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, காவல் துறையினர் வினாத்தாள்களை எடுத்துச் செல்லும் நடமாடும் வாகனம், அனைத்து தேர்வு மையங்கள், கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் உள்ளிட்ட இடங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையினர் மூலம் தேவைப்படும் இடங்களில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.