புகைப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்!… ஆண்டுதோறும் 1.3 மில்லியன் பேர் பலியாகின்றனர்!… ஆய்வில் அதிர்ச்சி!
புகைப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் கணக்கானோர் பலியாகின்றனர் என்று லான்செட் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் இறப்புகளில் இந்த 7 நாடுகளில் தான் பாதிக்கும் மேலானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புகைபிடித்தல் மற்றும் தடுக்கக்கூடிய மூன்று ஆபத்து காரணிகளான மது, உடல் பருமன் மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று ஆகியவை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் முக்கியமாக, புகைப்பழகத்தால் ஏற்படும் புற்றுநோய் மூலமே அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கர்ப்பப்பை புற்றுநோயால் 2 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இது 90% உள்ளது. இந்தியாவில் ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு தலை, கழுத்துப்பகுதி புற்றுநோயாலும், பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும் உயிரிழக்கின்றனர். மற்ற நாடுகளில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, தென்னாப்பிரிக்காவில் குறைவாக உள்ளன. புகைப்பழக்கம், மது அருந்துவதால், உயிரிழப்பில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யாவில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட 9 மடங்கு அதிகமாக உள்ளது. உடல் பருமன், பாலியல் வழி நோய்த் தொற்று புற்றுநோயால் பெண்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.