கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிட கூடாது..
நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இங்கு அதுகுறித்து விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் பூண்டு சாப்பிட கூடாது?
ஹெபடைடிஸ் : ஹெபடைடிஸைத் தடுப்பதற்கு பலரும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இருப்பினும், ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு பூண்டு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் பூண்டு ஹெபடைடிஸ் வைரஸில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, பூண்டில் உள்ள சில கூறுகள் வயிறு மற்றும் குடல்களைத் தூண்டிவிடும், செரிமான பாதையில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக ஹெபடைடிஸ் நோயாளிகளிடம் குமட்டல் அறிகுறி அதிகரிக்கும். அதோடு, பூண்டில் உள்ள நிலையற்ற கூறுகள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபினைக் குறைத்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு நல்லதல்ல.
வயிற்றுப்போக்கு : வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், பூண்டு கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஒருவேளை அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பூண்டு சாப்பிட்டால், பூண்டில் உள்ள காரப் பண்புகள், குடலைத் தூண்டிவிடும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு இன்னும் தீவிரமாகி, நிலைமை மேலும் மோசமாகும்.
கண் நோய்கள் : க்ளுக்கோமா, கண் புரை, வெண்படல அழற்சி மற்றும் பிற கண் நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் குறைவான அளவிலேயே பூண்டு சாப்பிட வேண்டும். பல நாட்களாக பூண்டுகளை அதிக அளவில் உட்கொண்டால் கல்லீரல் சேதமடைவதோடு, கண்களும் பாதிக்கப்படுவதாக சீன மருத்துவத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. பூண்டுகளை அதிகமாக அன்றாடம் எடுத்தால், அதனால் மோசமான கண் பார்வை, நினைவிழப்பு போன்ற மோசமான அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அன்றாடம் அளவாக பூண்டு எடுப்பதோடு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளான இறைச்சி கல்லீரல், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முட்டை, பால், கேரட், தக்காளி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
நெஞ்செரிச்சல் : அமெரிக்கா சர்வதேச புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, நற்பதமான பூண்டு பற்களை வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடுமாம். ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்ட அறிக்கையின் படி, பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரைப்பை உணவுக்குழாய் அழற்சி நோயை உண்டாக்குமாம்.
வாய் துர்நாற்றம் : உங்களுக்கு ஏற்கனவே வாய் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறதா? அப்படியானால் அதற்கு நீங்கள் சாப்பிடும் பூண்டு கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள சல்பர் என்னும் பொருள் தான்.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் : கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால், அது விரைவில் பிரசவ வலியை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகம் உட்கொண்டால், தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்க மறுக்க வாய்ப்புள்ளது.