பக்கத்து வீட்டு மரம் உங்களுக்கு இடையூறாக இருந்தால் என்ன செய்வது? சட்டம் சொல்வதென்ன?
பக்கத்து வீட்டுக்காரர் தனது தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தை வளர்க்கிறார் என்றால், அதன் கிளைகள் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ அல்லது உங்கள் உடமைக்கோ தீங்கு விளைவித்தால், அதை வெட்ட முடியுமா? இது தொடர்பாக சட்டத்தில் என்ன மாதிரியான விதிகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் பக்கத்து வீட்டில் நடப்பட்ட மரத்தின் கிளைகள் உங்கள் வீடு வரை பரவி உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினால் அல்லது உங்கள் இடத்தை மறித்தால், அதிகப்படியாக வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை நீங்கள் வெட்டலாம். ஏனெனில், உங்கள் சொந்த இடத்திற்கு வரும் மரக்கிளைகள் அசையாச் சொத்தில் ஆக்கிரமிப்பாகக் கருதப்படும்.
அண்டை வீட்டாரின் சொத்தில் உள்ள மரம் உங்கள் நிலத்தில் ஊடுறுவினால், சிக்கலை ஏற்படுத்தும் மரத்தின் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்ட உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த மரத்தின் கிளைகளை நீங்கள் வெட்டுவதற்கு முன்னர், முதலில் உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதில், மரத்தின் நிலை, அதனால் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
பக்கத்து வீட்டுக்காரர் மரத்தை வெட்ட அனுமதிக்கவில்லை என்றால்?
அதிகாரி அனுமதித்த பிறகும், உங்களுக்கு இடையூறாக இருக்கும் மரத்தின் கிளைகளை வெட்ட அக்கம்பக்கத்தினர் அனுமதிக்கவில்லை என்றால், நீங்கள் போலீசில் புகார் செய்யலாம். மரத்தால் உண்டான தடை, உங்கள் அசையாச் சொத்தை ஆக்கிரமிப்பதால் அதை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கும் தொடரலாம்.
மரத்திலிருந்து உங்கள் உயிருக்கும் உடமைக்கும் கடுமையான அச்சுறுத்தல் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக மரத்தை அகற்றலாம். மரம் விழப்போகிறது அல்லது அதன் கிளைகள் உடையும் அபாயம் அதிகம் என்று வைத்துக்கொள்வோம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அதைப் பற்றி நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்.
Read more ; JOB | லட்சத்தில் சம்பளம்.. இந்திய-திபத்திய எல்லை காவல் படையில் வேலை!!