சர்க்கரை நோய் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியுமா..? மருத்துவர்கள் சொல்வதை கேளுங்க..!!
தாத்தா, பாட்டிக்கு, அப்பா அல்லது அம்மாவுக்கு இருக்கின்ற சர்க்கரை நோய் நம்மையும் தாக்கக் கூடும் என்ற அச்சம் உங்களுக்கும் இருக்கக் கூடும். அதிலும் 30 வயதை நெருங்கி விட்டாலே இன்றைக்கு சர்க்கரை நோய் குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்படியொரு நிலையில், வாழ்வியல் மாற்றங்கள், திட்டமிட்ட நடவடிக்கைகள் போன்றவை மூலமாக இதனை தடுக்க முடியும் என்று தெரிவிக்கிறார் சண்டீகரைச் சேர்ந்த மருத்துவர் ஆஷு ரஸ்தோகி.
ஜாமா மருத்துவ இதழில் அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகளில், சர்க்கரை நோய்க்கான அபாய பட்டியலில் இருந்த மக்களுக்கு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொண்டதாகவும் அதன்படி உடல் எடை குறைப்பு, ஆரோக்கியமான உணவு, அதிகமான உடல் இயக்க நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொண்ட பிறகு ரத்த குளுகோஸ் அளவு பெருமளவில் குறையத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஆஷு ரஸ்தோகி கூறுகையில், ”சர்க்கரை நோய்க்கான அபாய பட்டியலில் நாம் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இதன் மூலமாக எதிர்கால விளைவுகளை கட்டுப்படுத்த முடியும். அபாய பட்டியலில் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் உள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் மிக அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோய்க்கு முந்தைய அபாயநிலை...
பொதுவாக ரத்தப் பரிசோதனை செய்யும்போது உங்கள் குளுகோஸ் அளவு 140 mg/dl என்ற அளவுக்கு மேல் இருந்தால் நீங்கள் சக்கரை நோய்க்கான அபாய பட்டியலில் உள்ளீர்கள் என்று அர்த்தம். அதுவே 200 mg/dl என்றால் நிச்சயமாக நீங்கள் சர்க்கரை நோயாளி தான். நாட்டில் 101 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயாளிகளாக இருக்கின்றனர். 136 மில்லியன் மக்கள் இதற்கான அபாயநிலை பட்டியலில் உள்ளனர். இது மட்டுமல்லாமல் உடல் பருமன், ஹைப்பர்டென்சன், அதிக கொலஸ்ட்ரால் போன்றவையும் இணை நோய்களாக வந்து விடுகின்றன.
குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த முடியுமா..?
உடல் எடை குறைப்பு நடவடிக்கைகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலமாக குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த முடியும். இதனால், சர்க்கரை நோயாளிகளாக மாறுவது தடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.