பூனைகள் குறுக்கே சென்றால், போன காரியம் நிறைவேறாதா..! அபசகுணம் ஏற்படுமா.? உண்மை என்ன.?
பூனைகள் மக்களின் செல்லப் பிராணிகளில் ஒன்று. பெரும்பாலான வீடுகளில் மக்கள் பூனைகளை குழந்தைகள் போல் கொஞ்சி வளர்த்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனாலும் பூனைகள் தொடர்பான சில மூடநம்பிக்கைகளும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பூனைகள் குறுக்கே சென்றால் போன காரியம் நிறைவேறாது என்று நம்புவது மற்றும் கருப்பு பூனையை பார்த்தால் அபசகுனமாக கருதுவது போன்றவை இன்றும் மக்களிடம் காணப்படுகிறது.
இவையெல்லாம் நிரூபிக்கப்படாத மூடநம்பிக்கைகளாகவே இருந்து வருகிறது. எனினும் பூனைகள் தொடர்பான இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடம் பரவுவதற்கு அடிப்படை காரணமாக ஒரு சில வரலாற்று காரணங்கள் இருந்திருக்கிறது. இவற்றினால் தான் இந்த மூடநம்பிக்கைகள் தொன்று தொட்டு பரவி வந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் எலிகளின் மூலமாக பரவி பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது. பூனைகள் அதிகம் சாப்பிடும் உணவாக எலி இருந்தது. எனவே பூனைகள் மூலமாகவும் மனிதர்களுக்கு பிளேக் நோய் பரவும் என்ற அபாயம் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பூனைகளை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.
மேலும் பூனைகள் செல்லும் இடங்களை தவிர்க்க தொடங்கினர். இது நாளடைவில் பூனைகளுக்கு எதிரான மூடநம்பிக்கையாக மாரி இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியாக பூனைகளால் எந்தவிதமான அபாசகுணமும் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.