பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்த தடை...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைடு பயன்படுத்த ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்தத் தடையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பழ வர்த்தகர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது. விதிகளின்படி இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்புத் துறைகளை எஃப்எஸ்எஸ்ஏஐ கேட்டுக் கொண்டுள்ளது.
மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்க பொதுவாக பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு, அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் உடலுக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. இந்த பொருட்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். இந்த ஆபத்துகள் காரணமாக, பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்துவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடு பரவலாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பழங்களைப் பழுக்க வைக்க பாதுகாப்பான எத்திலீன் வாயுவைப் பயன்படுத்த எஃப்எஸ்எஸ்ஏஐ அனுமதித்துள்ளது. பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க எத்திலீன் வாயு பயன்படுத்துவது தொடர்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ, விரிவான வழிகாட்டுதலை இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய தள இணைப்பில் வெளியிட்டுள்ளது.
Link: https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Guidance_Note_Ver2_Artificial_Ripening_Fruits_03_01_2019_Revised_10_02_2020.pdf