ஜன 10-ம் தேதிக்குள்... பொங்கலுக்கு 15 ரக சேலைகள்... 5 விதமான வேட்டி...! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு...!
டிசம்பர் 31-ம் தேதிக்குள் பொங்கல் வேட்டி, சேலைகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க வருவாய்த்துறையிடம் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி; பொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளோம். கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் வந்ததால் வேட்டி, சேலை வழங்குவதில் சற்று காலதாமதமானது. இந்த ஆண்டு அது போல நடக்காது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்காக வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, வருவாய்த்துறையிலிருந்து நியாய விலைகடைகளுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்படவுள்ளது. வேட்டி, சேலைகள் தரமாகவும், பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் 90 சதவிகிதம் வழங்கபடும். ஜனவரி 10 ம் தேதிக்குள் மொத்தப்பணிகளும் முடிக்கப்படும்.
விலையில்லா வேட்டி, சேலைகளை நெசவாளர் சங்கங்கள் தான் உற்பத்தி செய்யு முடியும் என்பதால் அதற்கான ஒப்பந்தங்களும் விடப்படுகிறது. ஆனால், பலர் குறைகளை கூறினார்கள். ஆனால் நாங்கள் அவற்றை பரிசோதனை செய்து தான் விலையில்லா வேட்டி,சேலைகளை வழங்குகிறோம். 15 ரகங்களில் சேலைகளை வழங்க உள்ளோம். துணிகள் ஒன்று, இரண்டு சிறிய அளவில் பாலிஸ்டர் கலப்படம் இருக்கும். ஆனால் முழுவதும் தரமானதாக அளிக்கிறோம். மேலும் 5 ரகங்களில் வேட்டிகளையும் வழங்க உள்ளோம்.
திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து கைத்தறிதுறை அமைச்சர் என்ற முறையில் நானே பதில் அளித்தேன். அதன் பிறகு யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. நூலின் விலை உயரவில்லை, கட்டுபாட்டில் தான் உள்ளது. காட்டன் கார்பரேஷன் ஆப் இந்தியா கட்டுபாட்டில் நூல் விலை உள்ளது. சைமா எனப்படும் சௌத் இந்தியா மில் அசோஷியேசன் கோரிக்கையை ஏற்று வரியை நீக்கினோம். மில்களுக்கு மானியம் அளித்தோம் என்றார்.