ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு..!! தமிழக அரசியல் களத்திற்கு பேரிழப்பு..!! தலைவர்கள் இரங்கல்..!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவர், எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடியவர். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், 'உடம்ப பாத்துக்கோங்க' என்று சொல்லத் தவறியதே இல்லை. அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரின் கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினர், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வலிமை பெற்று, வகுப்புவாத, மதவெறி சக்திகளை எதிர்த்து போராடும் காலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு பேரிழப்பாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களின் நட்பை பெற்று, தொடர்ந்து உறவில் இருந்து வந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பழகுவதற்கு இனிய பண்பாளர், கொண்ட கொள்கையில் உறுதியானவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்தது. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பேசக்கூடியவர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தமிழக அரசியல் களத்திற்கு பேரிழப்பாகும்" என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Read More : யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..? தந்தை, மகனை காவு வாங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி..!!