காலையிலே குட் நியூஸ்...! மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை...! முழு விவரம்
14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்,கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதுதவிர, அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று கடந்த மார்ச் மாதம், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றிருந்ததை அதிக பட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டது. எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் ஆணைப்படி கீழ்காணும் கட்டடங்களுக்கு, மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என மின் வாரியம் அறிவித்துள்ளது. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் தேவை இல்லை. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. அதே போல 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .