திருநெல்வேலில ஊட்டியா.? நம்ம பட்ஜெட்டில் இப்படி ஒரு சுற்றுலா தளமா.?
மக்களுக்கு சுற்றுலா செல்வது என்பது எப்போதுமே மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு விஷயம். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இணையான ஒரு மலைப் பிரதேசம் தென் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது மாஞ்சோலை. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேல் பகுதியில் அமைந்திருக்கும் அழகிய மலை கிராமம் தான் இது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே தேயிலை பயிரிடப்படும் தேயிலை எஸ்டேட்டாக விளங்கி வருவதோடு புலிகள் சரணாலயமாகவும் இந்த பகுதி செயல்பட்டு வருகிறது. மாஞ்சோலை கிராமம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு செருப்பு ஃபாரஸ்ட் ஆகும். இங்கு சுற்றுலா செல்வதற்கு அம்பாசமுத்திரத்தில் இருக்கும் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். இதற்காக சுற்றுலா செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு பயணம் மேற்கொள்பவர்களின் விபரம் மற்றும் வண்டி எண் ஆதார் கார்டு போன்றவற்றை அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
மாஞ்சோலையின் மேற்பகுதியில் குதிரை வெட்டி, நாலு மூக்கு, அப்பர் டேம் மற்றும் கோதை ஆறு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு இருக்கும் பார்வை கோபுரங்களின் மூலம் மாஞ்சோலை வனப்பகுதியின் அழகை ரசிக்கலாம். இந்தப் பகுதியில் மயில் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றையும் காண முடியும். மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு என்று கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இந்த விருந்தினர் மாளிகைகளும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இங்கு தங்குவதற்கு வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
இங்கு தனியாக உணவு விடுதிகள் எதுவும் கிடையாது. சுற்றுலா வருபவர்கள் அங்கிருக்கும் மக்களிடம் கூறினால் அவர்கள் சைவ மற்றும் அசைவ உணவு சமைத்துக் கொடுப்பார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகான பகுதியாகும். இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை தென் தமிழகத்தின் மலைவாழ் பிரதேசமாக விளங்கி வருகிறது. இந்தப் பகுதியில் செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலா மேற்கொண்டால் நல்ல குளிர் பற்றும் மழையை ரசிக்க முடியும்.
மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளிலிருந்து மாஞ்சோலைக்கு இயக்கப்படுகிறது. இவை தவிர பெரிய ரக கார்களிலும் இங்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம். ஒரு நாள் அனுமதியில் செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் மணிமுத்தாறு திருப்பிட வேண்டும்.