இரண்டு நாள் தொடர் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட உடல்கள்…! ரூ.5 லட்சம் நிதியுதவு..! ஆறாத வடுவாக மாறிய திருவண்ணாமலை நிலச்சரிவு சம்பவம்..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதி மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இதில் ஒரே வீட்டில் வசித்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா மற்றும் உறவுக்கார சிறுமிகள் மகா, ரம்யா, வினோதினி உள்பட 2 பெரியவர்கள் 5 சிறுவர்கள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களுடைய நிலை என்ன என தெரியாமல் மீட்பு பணிகள் நடந்து வந்தன. மின்சார வசதி துண்டிப்பு, தொடர் மழை போன்ற இடையூறு காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த 2 ஆம் தேதி ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 3ஆம் தேதி) மற்ற இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது. நீண்ட நேர தேடுதல் பணிக்குப் பின் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்ததாக முதல்வர் சாடலின் கூறியிருந்தார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கும் போது இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதது, அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. விபத்து நடந்து இரு தினங்கள் ஆகியும் அந்த பகுதி மக்களிடம் அச்சம் போகவில்லை.