நீல நிற ஆதார் அட்டை!! இதை யாரெல்லாம் வாங்கலாம்!! விண்ணப்பிப்பது எப்படி?
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை. அரசோ, தனியாரோ நாம் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு இந்த ஆதார் கார்டுதான் அவசியமாகிறது.
மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும் ஆதார் கார்டுகள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டை இப்போதெல்லாம் குழந்தைகளுக்கும் எடுக்கச் சொல்கிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இதன்பெயர்தான், குழந்தை ஆதார் அட்டை அதாவது "பால் ஆதார்" (Baal Aadhaar) அல்லது நீல ஆதார் அட்டை என்பார்கள்.
நீலநிற ஆதார்:
பார்ப்பதற்கு நீல நிறத்திலேயே காணப்படும். குழந்தைகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கார்டு இதுவாகும். பெரியவர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளுக்கும், இந்த கார்டுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டையிலும் 12 இலக்க அடையாள எண்கள் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த நீலநிற ஆதார் அட்டைகளில் குழந்தையின் கருவிழி, கைரேகை ஸ்கேன் இவையெல்லாம் தேவையில்லை. குழந்தையின் ஆதார் அட்டையை சரிபார்க்க, பெற்றோர்களில் ஒருவர் அவர்களின் அசல் ஆதார் அட்டை மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைகளின் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் 5 வருடங்கள் மட்டுமே. குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது இந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இப்போதுள்ள ஆதார் அட்டையில் உள்ள 5 வயது குழந்தையின் புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது செல்லுபடியாகாது.
நீலநிற ஆதார் கார்டை பெறுவது எப்படி?
குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமானால், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்பதால், ஆதார் மையத்தை அணுகலாம். பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு, பெற்றோரின் ஆதார் அட்டைகள் போன்ற ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை நிரப்பி தர வேண்டும். பிறகு, கையில் தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆவணங்களையும் வழங்க வேண்டும். குழந்தையின் போட்டோவையும் தர வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படும்.மேலும் பிறந்த குழந்தைக்கு கூட நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு குழந்தையின் பிறந்த சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ரசீதுகள் கட்டாயம் தேவை.