'காஜல் அகர்வால் முதல் ஸ்ருதி ஹாசன் வரை..' பிரபலங்கள் பருகும் கருப்பு தண்ணீர்..!! இந்த Black water-ல அப்படி என்னதான் இருக்கு?
விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை அனைவரும் உயிர் வாழ தேவையான ஓர் அமிர்தம் என்றால், அது தண்ணீர் மட்டும்தான். உடலை உறுதியாக வைக்க, எந்த அளவுக்கு ஊட்டச்சத்தான உணவு தேவையோ, அதை விட முக்கியமானது தூய்மையான குடிநீர். ஆறு, கிணறு, ஊற்று என ஒவ்வொன்றிலும் கிடைத்த நீரை பருகிய மனித இனம், இன்று கடல் நீரையும் குடிநீராக்கி பயன்படுத்தி வருகிறது.
அண்மை காலத்தில், அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடித்து பழகிவிட்ட நாம், அடுத்தக்கட்டத் தேடலுக்கு, நம்மை அறியாமல் நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. இத்தகைய சூழலில்தான், விளையாட்டு வீரர்கள், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் என பலரையும் குளிர்வித்து, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது கருப்பு தண்ணீர்.
வழக்கமாக நாம் அருந்தும் தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்புடன், 6.5 முதல் 7.5 வரை pH எனப்படும் கார அமிலத் தன்மை இருக்கும். ஆனால், கருப்புத் தண்ணீரில் அதைவிட சற்று கூடுதலாக காரத் தன்மை இருக்கும். சாதாரணமாக தண்ணீரைச் சுத்திகரித்து, அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டே தயாரிக்கப்படுகின்றன மினரல் வாட்டர் கேன்கள்.
இந்த மினரல்களுடன் 70-க்கும் மேற்பட்ட தனிமங்களும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த கருப்புத் தண்ணீர் பாட்டில்கள், உடற்பயிற்சிக்குப் பிறகு இதை குடிப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான தாதுக்களும், தனிமங்களும் கரைசல் வடிவில் கிடைக்கும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு வெளியேறும் வியர்வையால் நீர்ச்சத்து குறையும்போது, அதை இந்த கருப்புத் தண்ணீர் ஈடு செய்கிறது.
அத்துடன், செரிமானத்தை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது, வயதான தோற்றத்தை குறைப்பதும் இந்த தண்ணீரின் தன்மை என்றும் கூறுகிறார்கள். சாதாரணத் தண்ணீரை விட, கருப்புத் தண்ணீர் சற்று கூடுதலான ஆற்றலைப் பெற்றது. காரத்தன்மை சற்றுக் கூடுதலாக இருக்கும் இந்த கருப்புத் தண்ணீர், பலவிதமான உடல் பிரச்சனைகளை தீர்க்கும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரை. இந்தியாவில் இந்த கருப்புத் தண்ணீரை தயாரிக்கும் எவோக்கஸ் நிறுவனம், ஒரு லிட்டர் நீருக்கு நிர்ணயித்துள்ள விலை ரூ. 200 ஆகும்.
சாதாரண குடிநீரைப் போல, சுவையாக இருக்கும் இந்த கருப்புத் தண்ணீர்தான், விராட் கோலி உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களின் விருப்பமான தண்ணீர். அவர் மட்டுமா நம்மூர் நடிகை ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் முதல் இந்தி நடிகர், நடிகைகள் வரை பலரும் விரும்பிக் குடிப்பது, இந்த கருப்புத் தண்ணீர்தான். இந்த தண்ணீர் பார்க்க சற்று கருப்பாக இருந்தாலும், இதற்கு சரியான பெயர் என்றால், கார நீர் என்பதுதான். சரி…
சாமானிய மக்கள் இந்த தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். மண்ணில் விளையும் காய்கறிகளை சராசரியாக நமது உணவில் எடுத்துக் கொண்டாலே, இந்த கார நீரில் இருக்கும் அத்தனை சத்துகளும் கிடைத்துவிடும். ஊட்டச்சத்தான உணவை எடுத்துக் கொண்டதுபோக, நாள்தோறும் தூய்மையான நல்ல குடிநீரை பருகினாலே போதும்.
Read more ; நீங்க கண்ணாடி யூஸ் பண்றீங்களா..? இந்த உணவுகளை சாப்பிட்டால் அது தேவையே இல்லை..!!