ஸ்கெட்ச் ரெடி.! டார்கெட் தமிழ்நாடு.! முக்கிய புள்ளியை களமிறக்கும் பாஜக.! அரசியல் நகர்வுகளில் பரபரப்பு.!
இந்தியாவிலும் பெரும்பான்மையான மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்தாலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே தொடர்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இதனை மாற்ற பாரதிய ஜனதா கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாஜகவின் மத்திய பொதுச் செயலாளர் சந்தோஷ் தமிழகத்திற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிஜேபி கட்சியுடன் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தார். இனி தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணியை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவின் முக்கிய இலக்காக தமிழகம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் 20000 கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 2024-ம் ஆண்டின் தனது முதல் பயணமே தமிழகத்திற்கு தான் எனவும் அந்த நிகழ்ச்சியில் பேசினார் .
இதனைத் தொடர்ந்து 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றிக்கான முழு முனைப்புடன் பிஜேபி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த கட்சியின் தேசிய செயலாளர் தமிழகத்திற்கு வருகை புரிந்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கி இருப்பதாக அந்தக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.