மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு!! யார் இந்த ஓம் பிர்லா? பின்னணி இதோ..
18-வது மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று சபாநாயகர் தேர்தல் நடந்தது.
18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று (ஜூன் 26) தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், 18வது மக்களவை சபாநாயகர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகராக தேர்வானதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகரான பெருமையை பெற்றுள்ளார் ஓம் பிர்லா. இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து அமர வைத்தனர்.
யார் இந்த ஓம் பிர்லா ?
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிர்லா மாணவ பருவத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோட்டா மாவட்ட பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி தலைவராகவும், பின்னர் அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1997 முதல் 2003-ம் ஆண்டு வரை பாஜகவின் இளைஞர் அணி தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஓம் பிர்லா, முதல் முறையாக கோட்டா தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.
தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டு கோட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார் ஓம் பிர்லா. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அந்த பதவிக்கு வந்த முதல் எம்.பி., என்ற பெருமையையும் பெற்றார்.
ஓம் பிர்லா அப்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், மக்களவையில் சபாநாயகருக்கான பணியை சிறப்பாக செய்து பாராட்டுதலை பெற்றார். இதனை மனதில் கொண்டே 18வது மக்களவைக்கும் அவரையே சபாநாயகராக்க பாஜக தேர்வு செய்தது.
Read more ; சாதிவாரி கணக்கெடுப்பு | மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனி தீர்மானம்!