Bird Flu | வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!
Bird Flu: கேரளாவில் உள்ள எடத்துவா கிராம பஞ்சாயத்து மற்றும் செருதானா கிராம பஞ்சாயத்தில் உள்ள வாத்துகளின் ரத்த மாதிரிகள் சிலவற்றில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 26 ஆம் ஆண்டு முதன்முதலாக பறவை காய்ச்சல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோய்க்கு இனிமே குறிப்பாக பறவைகளில் ஏற்படுகிறது. இந்த வைரஸ் மனித உடலை பாதிக்காது எனினும் H5N1 மற்றும் H7N9 போன்றவை சிறுநீரகச் செயலிழப்பு, இதயப் பிரச்சனைகள், நுரையீரல் செயலிழப்பு போன்ற தீவிரமான உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். இந்த நோய்க்கிருமி தொற்று கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கான காரணம் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
காரணங்கள்: பறவை காய்ச்சல் பாதிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒரு மனிதனுக்கு வைரஸ் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை புரிந்து கொள்வது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ் நீர் சளி மற்றும் நீர் துளிகள் மனிதனின் காது மூக்கு மற்றும் கண்களின் மூலமாக மனித உடலுக்கு பரவுகிறது.
ஒரு மனிதன் பாதிக்கப்பட்ட பறவை அல்லது பறவைகளின் உமிழ் நீர் சளி மற்றும் நீர் துளிகள் பட்ட அசுத்தமான மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும் போது அவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. பறவை காய்ச்சல் தொற்று ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவலாம்.
ஆனால் இவை மிகவும் அரிதாகவே நடைபெறும். கர்ப்பிணிப் பெண்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் பெரும்பாலும் பறவைக் காய்ச்சலால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம்.
அறிகுறிகள்: பறவை காய்ச்சல் வைரஸ் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் அறிகுறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தெரியும். முதலில் சாதாரண சீசன் காய்ச்சல் போன்று இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
இருமல், சளி, தலைவலி, சோர்வு, குமட்டல், தசைவலி, அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வெண்படல அழற்சி, வயிற்று வலி மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வருதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோய் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும், சில சமயங்களில் அது ஆபத்தானதாகவும் இருக்கலாம். இது 7 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும்.
தற்காப்பு நடவடிக்கைகள்: பாதிக்கப்பட்ட பறவை மற்றும் அந்தப் பறவையின் உமிழ்நீர் சளி மற்றும் நீர் துளிகளுடன் நேரடியாக தொடர்புடைய மேற்பரப்புகளை தவிர்க்க வேண்டும. பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தால் பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோழிப்பண்ணைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிய வேண்டும். மேலும் கைகளை சரியாக கழுவ வேண்டும். சுகாதாரமற்ற சூழ்நிலையில் பறவைகள் மற்றும் முட்டைகள் விற்கப்படும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும
நோயின் சிகிச்சையில் ஒசெல்டமிவிர் போன்ற சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அடங்கும், இது நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது