IPC Section 206.? 'BharatPe' நிறுவனத்திற்கு, கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ்.!
ஃபின்டெக் யூனிகார்ன் பாரத்பே(BharatPe) நிறுவனத்திற்கு, அதன் நிறுவனர் அஷ்னீர் குரோவர் மீது, நிறுவனம் எடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கேட்டு, கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் நிறுவனச் சட்டத்தின் 206வது பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குரோவருக்கு எதிரான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையும் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து பாரத்பே அளித்த அறிக்கையில், "நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்து, எங்கள் நிறுவனத்திற்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. அந்த தகவல் 2022ஆம் ஆண்டு உள்ளக ஆளுகை மதிப்பாய்விற்குப் பிறகு தொடங்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாகும். இதுகுறித்து எங்கள் தணிக்கை முடிவுகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு நாங்கள் அனைத்து வகை ஒத்துழைப்பையும் கொடுக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருட பழமையான பாரத்பே நிறுவனம், 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து Nykaa IPOவில் ஒதுக்கீட்டைப் பெற தவறிய கோடாக் குழுமங்களின் ஊழியரை, பாரத்பே நிறுவனத்தின் நிறுவனர் அச்சுறுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன் பிறகு பாரத்பே நிர்வாக இயக்குனர் குரோவர் பதவி விலகினார்.
பின்னர் பாரத்பே நிறுவனம், குரோவரின் தலைமையில் நடந்த நிதி நடைமுறைகளை பற்றிய ஆய்வை தொடங்கியது. அந்த ஆய்வின் முடிவில் குரோவர் போலி பில்களை தயாரித்ததும், நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குரோவர் மீது சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
பாரத்பே நிறுவனம் குரோவர் மீது வைத்த குற்றச்சாட்டில், குரோவர், பாரத்பே நிறுவனத்தின் தொழில்நுட்பத்திற்கோ, கருத்துருவுக்கோ எந்த பங்கும் அளிக்கவில்லை. இந்த நிறுவனத்தில் 2018ஆம் ஆண்டு மிக சொற்பமான ₹31,920 பணம் குரோவர் முதலீடு செய்ததில், அவருக்கும் இந்த நிறுவனத்திற்குமான தொடர்பு தொடங்கியது. அதற்காக அவர் 3,192 பங்குகளைப் பெற்றார், என்று தெரிவித்தது.