"சனாதன தர்மத்தின் மகா முனிவர் திருவள்ளுவர்" - ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்தால் வெடித்த சர்ச்சை.!
தமிழகத்தின் சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒருவராக விளங்கும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட இந்த தினத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவிநிற உடை அணிந்து கழுத்து மற்றும் நெற்றியில் பட்டையுடன் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ராஜ் பவனின் எக்ஸ் வலைதளத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வாழ்த்துச் செய்தியில் " திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் என்னுடைய மரியாதையான வணக்கத்தை திருவள்ளுவருக்கு சமர்ப்பிக்கிறேன். பாரம்பரியம் மிக்க தமிழ் மண்ணில் தோன்றிய பெரும் புலவர் திருவள்ளுவர். அவர் ஒரு சிறந்த புலவராக மட்டுமில்லாமல் தலைசிறந்த தத்துவ ஞானியாகவும் விளங்கியவர். பாரதிய சமாதான பாரம்பரியத்தின் ஆகச் சிறந்த முனிவராக திருவள்ளுவர் இருந்திருக்கிறார் . அவரது சிறப்பான தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஞானம் மனித குலத்திற்கு வழிகாட்டுவதோடு பல தலைமுறைகளுக்கும் முத்துவேகத்தை கொடுக்கிறது" என தெரிவித்து இருக்கிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார். இது தனது 'X' தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்" திருக்குறளில் இருக்கும் ஆழமான ஞானமிக்க கருத்துக்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் நமக்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கிறது. திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இந்த சிறப்பு நாளில் அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் மீது கவனம் செலுத்துவதற்கும் புரிந்துணர்வின் மூலம் உலகை கட்டமைப்பதற்கும் நம்மை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.
மேலும் திருவள்ளுவர் வழங்கிய போதனைகளை பின்பற்றி அவரது கருத்துக்களை நடைமுறைப்படுத்த உறுதி ஏற்போம் எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார் . திருவள்ளுவர் குறித்தான சர்ச்சை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது . தமிழக பாஜக 2019 ஆம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை முதல் முதலாக வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழக மக்களிடம் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவி சால்வை அணிவித்த போது மீண்டும் சர்ச்சை வெடித்தது.