பாரத் பந்த் 2024: "நாளை பள்ளிகள் செயல்படுமா".? வெளியான முக்கிய அறிவிப்பு.!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் கிராமின் பாரத் பந்த் என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் SKM ஆகியவை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் கடைகள் தொழில் நிறுவனங்கள் இயங்காது என்று தெரிகிறது. மேலும் பள்ளி கல்லூரிகள் செயல்படுமா என்ற அச்சம் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
கிராமின் பாரத் பந்த் 2024 பிப்ரவரி 16, 2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விவசாயிகள் பெரும் போராட்டத்தில் பங்கேற்பார்கள். பெரும்பாலான மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 4 மணி நேரம் மூடப்படும். இந்த நாளில், அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும், கிராமப்புற வேலைகளுக்கும் கிராமங்கள் மூடப்பட்டிருக்கும். எந்த விவசாயியோ, விவசாயத் தொழிலாளியோ அல்லது கிராமப்புறத் தொழிலாளியோ அன்று வேலை செய்ய மாட்டார்கள்" என்று SKM தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் டாக்டர் தர்ஷன் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் தொடர்பான சமீபத்திய செய்திகளின்படி மாநிலங்களில் பள்ளிகள் மூடுவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகிய கல்வி நிறுவனங்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் அவற்றிற்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளை கலந்தாலோசிப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தேர்வு எழுத ஒரு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த அறிவுரைகளின் படி விவசாயிகளின் போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு காலதாமதம் ஆகலாம். எனவே தேர்வு எழுதவரும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.