எமனுக்காக ஏற்றப்படும் ”பரணி தீபம்”..!! நீங்கள் செய்த பாவங்கள் போக்க வீட்டில் நாளை இப்படி விளக்கேற்றுங்கள்..!!
திருக்கார்த்திகை தீபத்திருநாள் வரும் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். இந்த விழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 4ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது. தற்போது, தினந்தோறும் தேரோட்டம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதற்கு முன்னதாக அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதேபோல், மற்ற கோயில்களிலும் மகா தீபம் ஏற்றுவதற்கு முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். இதே நடைமுறையை நாம் வீட்டிலும் பின்பற்றலாம். பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கார்த்திகை மாதத்தில் மொத்தம் 3 நாட்கள் விளக்கேற்றும் நடைமுறை உள்ளது. அதாவது, கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம், அடுத்த நாள் மகா தீபம், அதற்கு அடுத்த நாள் பாஞ்சராத்திர தீபம் ஆகும். இதில் பரணி தீபம் எமதர்மனுக்காகவும், மகா தீபம் சிவனுக்காகவும், பாஞ்சராத்திர தீபம் பெருமாளுக்காகவும் ஏற்றப்படுகிறது. அந்த வகையில், வீடுகளில் பரணி தீபம் எதற்காக ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் வரும்.
அதுவும் எமதர்மனுக்கான தீபத்தை நாம் ஏன் ஏற்ற வேண்டும் என்ற கேள்வி எழும். அதாவது, நசிகேதன் என்பவரின் தந்தை யாகம் செய்தார். அந்த யாகத்தின் போது தேவர்களுக்கு அவர்கள் விரும்பிய பொருளை தானமாக வழங்கினார். இதனால் குழப்பமடைந்த நசிகேதன், தனது தந்தையிடம் சென்று "எதற்காக தேவர்களுக்கு கேட்பதை எல்லாம் தருகிறீர்கள். இப்படியே தானம் செய்து கொண்டிருந்தால், கடைசியில் நமக்கு ஒன்றுமே மிஞ்சாது. என்று கூறியுள்ளார்.
அப்போது அவனுடைய தந்தை, "ஆம் உன்னையும் தானமாக கொடுக்க போகிறேன்" என குண்டை தூக்கி போட்டார். அப்போது அவன், "என்னை யாருக்குப்பா தானமாக கொடுக்க போகிறீர்கள்" என கேட்க, அதற்கு தந்தையோ, "எமனுக்கு உன்னை தானமாக கொடுக்கப் போகிறேன்" எனக்கூறி கொடுத்தும் விட்டார். தந்தை தானமாக கொடுத்ததால் உயிருடனேயே எமலோகத்திற்கு நசிகேதன் சென்றான். அங்கு மனிதர்கள் படும் துன்பத்தை கண்டு பயம் கொண்டான்.
இது குறித்து எமனிடமே பலவிதமான கேள்விகளை கேட்டான். அதில், "மனிதர்கள் பூமியில்தான் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இங்கு வந்தாலும் துன்பம்தானா" என கேட்கிறான். அதற்கு எமதர்மன், "அவரவர் செய்த பாவங்களுக்கான தண்டனைதான் இது" என சொல்ல, "இந்த துன்பங்களில் இருந்து விடுபட என்ன தீர்வு" என நசிகேதன் கேட்டான். மனிதர்கள் தங்களை அறியாமல் செய்யும் பாவங்கள் தீர பரணி தீபம் ஏற்றி வழிப்பட வேண்டும் என்கிறார் எமன்.
மார்கழி மாதம் தேவர்கள் உலகிற்கு விடியற்காலையாக இருக்கும். இதனால் அவர்களுக்கு கார்த்திகை மாதம் இருள் மாதமாகும். அந்த சமயத்தில் நம் வீடுகளில் விளக்கேற்றினால் தேவர்களின் அருள் கிடைக்கும். அதிலும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். டிசம்பர் 12ஆம் தேதி பரணி தீபமாகும். அதுவும் எமனுக்கு பிடித்த பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டுமாம். குறைந்தபட்சம் 5 விளக்குகளையாவது ஏற்ற வேண்டுமாம். ஒரு தாம்பூலத்தில் கோலமிட்டு அனைத்து திசைகளையும் பார்க்கும்படி நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். எனவே, நாளை (டிசம்பர் 12) உங்கள் வீடுகளில் பரணி தீபத்தை ஏற்றி மகாலட்சுமியின் அருளை பெற்றிடுங்கள்.