வங்கதேச கேப்டனை கல்லால் அடித்து துரத்துவோம்!… மேத்யூஸ் சகோதரர் ஆவேசம்!
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அசலங்கா 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.
280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. தொடர் தோல்விகளை தழுவிய வங்கதேசம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது. 41.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம்.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சமரவிக்ரமா-வின் விக்கெட்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பேட்டிங் செய்ய களம் புகுந்த மேத்யூஸ், கிரீசை தொட்டு கும்பிட்டு விட்ட தனது ஹெல்மெட்டை சரிசெய்தார். ஆனால், ஹெல்மெட் இறுக்க பயன்படுத்தப்படும் பட்டை கீழே அவிழ்ந்து விழுந்தது.
அதனால், பேட்டிங் செய்யாத மேத்யூஸ் டக்-அவுட்டில் உள்ள தனது அணியினரை அழைத்து வேறு ஹெல்மெட் எடுத்து வர செல்லி சைகை காட்டினார். அவர்கள் எடுத்து வர கால தாமதம் ஆனா நிலையில், பேட்டிங் செய்யாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அதனால் ஆட்டம் 2 நிமிடங்களுக்கு மேல் தடை பட்டது. அப்போது, வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கள நடுவர்களிடம் 'டைம் - அவுட்' அவுட் கொடுக்க அப்பீல் செய்தார். நடுவர்களும் கால தாமதம் கருதி டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் ஒருபந்து கூட விளையாடாமல் (0) ரன்னில் அவுட் ஆனார். 'டைம் - அவுட்' முறையில் ஒருவருக்கு அவுட் கொடுக்கப்படுவது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 விளையாடும் நிலைமைகளின்படி, “ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டர் ஓய்வுக்குச் செல்வதாக அறிவித்த பிறகு, களத்திற்கு உள்ளே வரும் பேட்ஸ்மேன் அல்லது அவருக்கு எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் அடுத்த 2 நிமிடங்களில் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்." பேட்ஸ்மேன் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அவுட்டாகக் கருதப்படுவார்."
இந்தநிலையில், இந்த விவகாரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸின் மூத்த சகோதரரும், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரருமான ட்ரெவின் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். வங்கதேச கேப்டனுக்கு விளையாட்டு உணர்வு சுத்தமாக இல்லை, ஜென்டில்மேன் விளையாட்டில் மனிதாபிமானம் காட்டவில்லை. ஷகிப்புக்கு இலங்கையில் வரவேற்பு இருக்காது. அவர் சர்வதேச அல்லது லங்கன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட இங்கு வந்தால், அவர் மீது கற்கள் வீசப்படும். அல்லது அவர் ரசிகர்களின் தொல்லையை சந்திக்க நேரிடும்" என்றார்.