உஷார் மக்களே.. மருத்துவமனை சின்கில் பரவும் பாக்டீரியா!
மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோலில் (AJIC) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவது உறுதிசெய்யப்பட்டது. அதில் கூறியதாவது, ஜூன் 2016 இல் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது சிறுவனுக்கு சூப்பர்பக் கார்பபெனிமேஸ் என்னும் பாக்டீரியா (CPE) முதல் முதலில் கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சில மாதங்களுக்குப் பிறகு மார்ச் 2017 இல், 15 வயது சிறுவனுக்கு கொடிய சூப்பர்பக் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, 19 குழந்தைகளுக்கு அந்த நோய் பரவியது. இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில், மருத்துவமனையில் உள்ள 9 சிங்கில் CPE கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மரபணு பகுப்பாய்வில் "கிளெப்சில்லா வெரிகோலா, க்ளெப்சில்லா குவாசிப்நிமோனியா மற்றும் எஸ்கெரிச்சியா கோலி" போன்ற பாக்டீரியா அடையாளம் காணப்பட்டது.
ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்த போதிலும், CPE பரவுதல் தொடர்ந்தது. அடுத்துள்ள அறைகளில் உள்ள சிங்கிலும் அதே பாக்டீரியா இனங்கள் காணப்பட்டது. வடிகால் மற்றும் இணைக்கப்பட்ட பிளம்பிங் வழியாக ஒரு மடுவிலிருந்து மற்றொரு மடுவிற்கு நோய்க்கிருமி பரவுவது சாத்தியமாகும் என்பது கண்டறியப்பட்டது. இறுதியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பாக்டீரியா பரவுதல் கட்டுக்குள் வந்தது.
இதுகுறித்து டோஹோ பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்கள் துறையின் இணை பேராசிரியர் சடகோ யோஷிசாவா கூறுகையில், மருத்துவமனை வார்டுகளில் உள்ள சிங்க் போன்ற நீர் தொடர்பான பிற பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவை CPE பரவுதலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது" எனக் கூறினார்.