சபரிமலை செல்வதற்கு முன் ஐயப்ப பக்தர்கள் இதை செய்ய வேண்டும்!… சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சபரிமலை செல்லும் போது சிகிச்சை பதிவுகள் மற்றும் மருந்துகளையும் உடன் எடுத்து வர வேண்டும்' என, மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக, அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தை மையப் பகுதியாக கொண்டு, சபரிமலை பக்தர்களுக்கு சிகிச்சை வசதி மற்றும் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலும் போதுமான மருத்துவ மையங்கள் உள்ளன. சபரிமலையில் நிலக்கல், பம்பை, அப்பாச்சி மேடு, நீலிமலை, சரல்மேடு, சன்னிதானம் ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக மலையேற்ற பாதையில் பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் உள்ளன.
இங்கும் முதலுதவி, ரத்த அழுத்த பரிசோதனை, ஆக்சிஜன் வழங்கும் வசதிகள், இதயத் துடிப்பை சீர்படுத்தும் கருவியான 'டிபிரில்லேட்டர்' தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் யாத்ரீகர்கள் விரதம் தொடங்கிய பிறகும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சிகிச்சை பதிவுகள் மற்றும் மருந்துகளையும் உடன் கொண்டு வர வேண்டும். மலையேற்றத்தின் போது யாத்ரீகர்களுக்கு நெஞ்சுவலி அல்லது அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.