பதற்றம்.! அயோத்தி சிறப்பு ரயில் மீது கல்வீசி தாக்குதல்..!! ரயில்வே காவல்துறை விசாரணை.!
குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரத் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்திலிருந்து புனித நகரான அயோத்திக்கு அஸ்தா சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே துறை அமைச்சரும் குஜராத் மாநில எம்பியுமான தர்ஷனா ஜர்தோஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு 1344 பயணிகளுடன் சூரத் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த ரயில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ராம் பிரதிஷ்டா சேவை பணியாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிறப்பு ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தூர்பார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நந்தூர்பார் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகளிடம் தாக்குதல் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் டி.எஸ் பானர்ஜி " அஸ்தா சிறப்பு ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நந்தூர்பார் ரயில் நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து தகவலை சேகரித்து வருகிறோம். விரைவில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.