child abduction: வைரலாகும் குழந்தை கடத்தல் தொடர்பான ஆடியோ, வீடியோ!… வதந்திகளை பரப்புவோருக்கு எச்சரிக்கை!
child abduction: கடந்த சில நாட்களாக சென்னை குழந்தை கடத்தல் தொடர்பாக ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு தலைவர் ஐயன் கார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, "சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் சார்பாக 17.02.2024 அன்று, 'சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பாக பரப்பப்படும் காணொளிகளுக்கும் நமது மாநிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறான தகவல்களைப் பார்த்து மக்கள் பதற்றமடைய வேண்டாம்' என்று பதிவு செய்திருந்தோம்.
சென்னை பெருநகர காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க காவல்துறையும் 'இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும், பொய்ச் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை பல செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு உள்ளன. நமது குழுவின் பரிந்துரையை ஏற்று 20.02.2024 அன்று சென்னை மாநகராட்சி சார்பில் வடசென்னை முழுவதும் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இத்தனை முயற்சி எடுத்தும் இரண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வேதனையானது. சமூக வலைதள பிரபலங்களிடமும் விழிப்புணர்வு பதிவுகளைப் பகிருமாறு கேட்டுள்ளோம். பொதுமக்களும் முன்வந்து பொய்ச்செய்திகள் மூலம் அப்பாவிகள் தாக்குதல்களுக்கு உள்ளாவதை தவிர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும். மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
English summary: child abduction, Warning not to believe rumours