வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...! விழிப்புணர்வு பதிவு...!!
வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் நேரத்தை குறிவைத்துதான் பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. நகைக்கு பாலீஸ் செய்வது, அம்மி கொத்துவது, எலக்ட்ரீஷியன் வேலை, பிளம்பர் வேலை என வீட்டை நாடி வரும் நபர்கள், சமயம் பார்த்து பெண்களை ஏமாற்றி பணம், நகை மற்றும் மற்ற பொருட்களைத் திருட்டிச்செல்கின்றனர். பெருகிவரும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.
* வாசல் மற்றும் முக்கிய இடங்களில் காமிரா பொருத்துவது சிறந்தது. கேட் உள்ள வீடு என்றால், தேவையான சமயம்தவிர, மற்ற நேரங்களில் கேட்டை பூட்டியே வைக்கவும். .
* வீட்டின் மெயின் மற்றும் உட்புற அறைகளின் எல்லாக் கதவுகளுக்கும் லாக் சரியாக வேலைசெய்கிறதா என அவ்வபோது செக் செய்து கொள்ள வேண்டும்.
* பெண்கள் தங்கள் போன் நம்பரை முன்பின் தெரியாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து போன் வாயிலாக தொல்லைகள் வந்தால் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யவும்.
* தங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாதவர்களிடம் பழகாமலும், அவர்களிடம் போன் நம்பர், வீட்டின் முகவரியை சொல்லக்கூடாது எனவும் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும்.
• முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.
* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.
* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.
* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.
* வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.
* எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.
* வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது. மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம்.
* குறிப்பாக, ஏதாவது ஆபத்து என்றால் உதவுபவராக இருக்கும் வகையில், அக்கம் பக்கத்தினருடன் பழகுவது முக்கியம்.