கவனம்!. தாய்ப்பால் குடித்தபோது புரையேறி ஒரு மாத குழந்தை உயிரிழப்பு!. சென்னையில் அதிர்ச்சி!.
Chennai: சென்னை வேளச்சேரி பகுதியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது புரையேறியதால் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், ஏழுமலை தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராம்ஜி (35), சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ஹரிப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஹரிப்பிரியா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 23 நாட்களுக்கு முன், இவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. நேற்றுமுன்தினம் இரவு ஹரிப்பிரியா தனது, குழந்தைக்கு, தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென குழந்தைக்கு புரையேறியதாக கூறப்படுகிறது. இதனால், பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷால்டி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ஹரிப்பிரியா கதறி அழுதார். தகவலறிந்த மேடவாக்கம் போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், ஹரிப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.