HMPV வைரஸ் பரவல் உண்மையா..? நிலைமை ரொம்ப மோசமா..? சீனாவில் இருந்து பரபரப்பு வீடியோவை வெளியிட்ட தமிழ் மருத்துவர்..!!
சீனாவில் HMPV வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் பணியாற்றி வரும் தமிழ் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது HMPV வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவிலும் நேற்று 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சீனாவில் ஹெச்.எம்.பி.வி. வைரஸுக்கு பலர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதேபோல், சீனாவில் நிலைமை மோசமாக இருப்பதால், சில இடங்களில் ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதை சீன ஊடகங்கள் மறைப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து சீனாவில் பணிபுரியும் கங்கேஷ்வரன் என்ற மருத்துவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில், ”சீனாவில் எந்த ஒரு வைரஸ் தொற்றும் புதிதாக பரவவில்லை. காலநிலை மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக ஏற்படும் வியாதிகளே தற்போது இருக்கின்றன. சீன அரசு எந்தவொரு அவசர நிலையையும் பிரகடனப்படுத்தவில்லை. மக்கள் அனைவரும் இயல்பான வாழ்க்கையையே மேற்கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.