ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சி... உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேதாந்தா ஆலையின் சட்டப்பூர்வ முயற்சிகள் முடிவடைந்துள்ளன. ஆலையைத் திறக்க உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.