அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்.. துணை முதல்வராகும் உதயநிதி.. அமைச்சரவையிலும் பெரிய மாற்றம்? பின்னணி என்ன?
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும், சில அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும், தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜன., 21ல், சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. லோக்சபா தேர்தலுக்கு முன், துணை முதல்வர் பதவி வழங்கினால், சரியாக இருக்காது என மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதனால், 'துணை முதல்வர் பதவி என்பது வதந்தி' என்று, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைதேர்தல் முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் இறுதியில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு, அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் பணிகளை கவனிக்கும்விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், எந்தந்த தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததோ, அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் தி.மு.க., தலைமை ஆலோசித்துள்ளது. மேலும், மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மாற்றம்; இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.