ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! மேலும் ஒரு ரவுடி என்கவுன்ட்டர்!
Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி சீசிங் ராஜா, போலீஸை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், பிரபல ரௌடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, நேற்று போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே சீசிங் ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சீசிங் ராஜா பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவிலும் சீசிங் ராஜா மீது கொலை வழக்குகள் உள்ளன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Readmore: டெங்கு காய்ச்சல்!. 48 மணிநேரத்தில் பலியான சிறுமி!. விழிப்புணர்வை ஏற்படுத்தும் தந்தையின் செயல்!