புதிதாக வீடு வாங்கப்போறீங்களா..? இந்த சான்றிதழ் இருக்கான்னு பாருங்க..!! இல்லைனா சிக்கல் உங்களுக்குத்தான்..!!
புதிதாக வீடு வாங்குவோர், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை நாடுகின்றனர். இதில் அதிக வீடுகள் உள்ள திட்டங்கள், குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் உள்ள திட்டங்கள் என 2 வகைகள் உள்ளன. எத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வீட்டை தேர்வு செய்வது என்பதில் முதலில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பின்னர், அதற்கான திட்டம் எது என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
இதில் அதிக வீடுகள் உள்ள பெரிய அளவிலான குடியிருப்பு திட்டங்களில் பிரச்சனையும் அதிகமாகவே இருக்கும் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனால், சிலர் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு, குறைந்த எண்ணிக்கை வீடுகள் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுப்போர், சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
குடியிருப்பு திட்டத்தில் தற்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா? அல்லது இனிமேல் தான் முடிக்கப்பட உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். கட்டுமான பணி நடக்கும் நிலையில், வீடு வாங்குவதாக இருந்தால் திட்ட அனுமதி ஆவணங்களை ஆராய வேண்டும். வீட்டை ஒப்படைக்கும் முன் பணி நிறைவு சான்றிதழ் அவசியம். பல இடங்களில் இது போன்ற சிறிய திட்டங்களை செயல்படுத்துவோர் பணி நிறைவு சான்று வாங்குவதில் அலட்சியம் காட்டுகின்றனர். வீடு வாங்குவோர் கேட்டாலும், அதெல்லாம் பெரிய திட்டங்களுக்கு தான், சிறிய குடியிருப்புகளுக்கு வராது என்று மழுப்புகின்றனர்.
அரசின் பொது கட்டட விதிகளின்படி, 3 வீடுகளுக்கு மேற்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயம். இதை சரியாக புரிந்து கொண்டு வீடு வாங்கும் நிலையில், செயல்பட வேண்டியது அவசியம். அப்போது தான் அந்த கட்டடத்தில் விதிமீறல்கள் இல்லாததை உறுதி செய்ய முடியும். இதில் கவனக்குறைவாக இருந்தால், கட்டட விதிமீறல்களால் எழும் பிரச்சனைகளில் சிக்க வேண்டியிருக்கும். வீடு வாங்குவோர் பணி நிறைவு சான்று விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.