புதிதாக கார் வாங்கப் போறீங்களா..? தேர்வு முதல் டெலிவரி வரை..!! இந்த விஷயங்களை மறக்காம நியாபகம் வெச்சிக்கோங்க..!!
இந்தியாவில் கார் வாங்குவது ஒன்றும் எளிதல்ல. அது ஒரு மிகப்பெரிய நடைமுறையே இருக்கிறது. நம்முடைய நேரம், முயற்சி, பணம் ஆகியவற்றை கொடுத்தாக வேண்டும். பல படிநிலைகளை கடந்து தான் ஒருவர் கார் வாங்க முடியும். இப்படிபட்ட சூழ்நிலையில், கார் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு தேவையான கார் எது..?
உங்கள் பட்ஜெட், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, வாகனம் ஓட்டுவதில் உள்ள அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே எந்த மாடல் காரை வாங்கலாம் என முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு சிறிய கார் தேவை என்றால் வேகன் ஆர், டியாகோ, மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, ஆல்ட்ரோ, ஐ20 போன்ற கார்கள் இருக்கின்றன.
செடான் வகை கார்கள் வேண்டுமென்றால் டிஸைர், ஆரா, அமேஸ், வெர்னா, ஹோண்ட சிட்டி போன்ற கார்கள் உள்ளன. இப்போது இந்தியாவில் SUV கார்களுக்கு தான் மரியாதை அதிகம். இந்த மாடல்களில் ஃபார்ட்சுனர், XUV700, கிரெட்டா, செல்டோஸ், நெக்ஸான் போன்ற பல கார்கள் இருக்கின்றன. MPV மாடல் கார்களில் இன்னோவா கிரிஸ்டா, எர்டிகா, XL6 போன்றவை உள்ளன. உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, உங்கள் தேவைக்கு எது சரியாக இருக்கிறதோ அந்த காரை வாங்குங்கள்.
சரியான விவரங்களை பெறுங்கள் :
எந்த காரை வாங்கலாம் என முடிவு செய்தப்பின், பல கார் டீலர்களிடம் விசாரியுங்கள். உங்களுக்கு ஐ20 பிடித்திருக்கிறது என்றால், மூன்று அல்லது நான்கு ஹூண்டாய் டீலர்களிடம் இந்த கார் குறித்து விசாரியுங்கள். அவர்களிடம் ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா என கேட்க கூச்சப்படாதீர்கள். குறிப்பாக காரின் விலை, பதிவுக் கட்டணம், சாலை வரி, காப்பீடு அகியவற்றிற்கு எவ்வுளவு செலவாகும் போன்ற விவரங்களையும் முதலிலேயே கேட்டுவிடுங்கள்.
காரை புக் செய்தல் :
அடுத்தப்படியாக நாம் தேர்வு செய்த காரை டீலரிடம் புக் செய்ய வேண்டும். இப்போதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும். காருக்கு கூடுதலாக பல விஷயங்களை இலவசமாக செய்து தருகிறோம் என்று கூறுவார்கள். அதை புக்கிங் ரசீதில் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், புக்கிங் ரசீதில் குறிப்பிடாத பொருட்களை டீலர்கள் காரில் பொறுத்த மாட்டார்கள். அதேபோல் புக்கிங்கை கேன்சல் செய்யும் தொகையை தெரிந்து கொள்ளுங்கள். புக்கிங் ரசீதில் அவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் புக்கிங்கை கேன்சல் செய்தால், டீலர் உங்களுக்கு எவ்வுளவு தொகை தர வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
காரை வாங்குவதற்கு முன் பரிசோதனை :
நீங்கள் தேர்வு செய்த கார் டீலரிடம் வந்ததும், அந்தக் காரைப் பரிசோதனை செய்யுங்கள். இன்னும் கார் உங்கள் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காரில் ஏதாவது பாதிப்பு இருந்தால் இப்போது தெரிந்துவிடும். காரை பதிவு செய்த பிறகு எதையும் மாற்ற முடியாது. இப்போது கூட நீங்கள் புக்கிங் செய்த காரை கேன்சல் செய்யலாம். இப்போதும் நீங்கள் காருக்கு கொடுத்த முன்தொகையை டீலர் கொடுத்தாக வேண்டும்.
கார் டெலிவரி நாள் :
அவ்வளவு எளிதாக காரை வீட்டிற்கு எடுத்து வர முடியாது. கார் டெலிவரி எடுக்கும் போது நிறைய நேரம் ஆகும். 3 மணி நேரம் கூட ஆகலாம். அன்றைய நாள் கூட்டத்தைப் பொறுத்து மாறுபடும். சில மாநிலங்களில் தற்காலிக பதிவு எண்ணை வைத்து காரை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஆகையால் உங்கள் மாநிலத்தில் உள்ள சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா ஒரிஜினல் ஆவணங்களையும் டீலரிடம் பெற்றுக் கொள்ளுங்கள். காரில் ஸ்பேர் வீல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இலவசமாக கூறப்பட்ட பொருட்கள் காரில் பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். எதுவும் இல்லாமல் இருந்தால் அதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளியுங்கள். அவ்வுளவுதான், இனி நீங்கள் காரை பத்திரமாக வீட்டிற்கு ஓட்டி வரலாம்.