5 ஏக்கர் நிலம், கார், டிராக்டர் இருந்தும் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? உடனே புகாரளிக்கலாம்..!!
தகுதியுள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வரும் நிலையில், இன்னும் கூட பல பெண்களுக்கு கிடைக்கவில்லை. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர். ஆனால், சிலர் அரசு நிர்ணயித்திருக்கும் உரிமைத்தொகை விதிமுறைகளுக்கு மாறாக ரூ.1,000 பெற்று வருகின்றனர். தகுதியில்லாமல் உரிமைத்தொகையை பெறுபவர்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம்.
5 ஏக்கருக்கும் மேலாக நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதிபெற முடியாது. கார், டிராக்டர் உள்ளிட் வாகனங்கள் வைத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் அல்ல. இருப்பினும், இதனை அரசிடமிருந்து மறைத்து ரூ.1,000 பெற்று வருகின்றனர். இவர்களால், தகுதி வாய்ந்த பெண்களுக்கு பணம் கிடைக்காமல் போகிறது. அதனால், இத்தகைய பயனாளிகள் இத்திட்டத்தில், இருந்து நீக்கப்பட்டால், புதிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பணம் கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு தெரிந்து யாரேனும் விதிகளை மீறி ரூ.1,000 பணம் பெற்று வந்தால், அதுகுறித்து புகார் அளிக்கலாம். கலைஞர் உரிமைத் தொகை திட்ட வலைதளத்திற்கு சென்று பயனாளியின் பெயர், ஊர், வட்டம், மாவட்டம், ரேஷன் கடை, அவர் எதனால் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியாது என்ற விவரங்களை உள்ளிட வேண்டும். புகார் அளிப்பவரின் பெயர், ஊர், தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகுதிகளை வருவாய்த்துறை, உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். அப்போது, பயனாளியின் தகுதியின்மை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கான ரூ.1,000 பணம் நிறுத்தப்படும். இதுவரை உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். விரைவில், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.