பணபலம், ஆள் பலம் இருப்பவர்களுக்கு தான் அதிகாரிகளா..? மக்களுக்கு இல்லையா..? உயர்நீதிமன்றம் காட்டம்..!!
நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகளையும் அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய
விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி மாவட்ட ஆட்சியர், வேப்பந்தட்டை
தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி பொன்னுசாமி, சாந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மனுதாரர்களின் விண்ணப்பத்தை 2 மாதங்களில் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பட்டா மாறுதல், நில அளவை செய்வது, எல்லை வரையறை செய்வது, பட்டா வழங்க கோருவது என சாதாரண மக்கள் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல், அவர்களை நீதிமன்றத்தை நாடச் செய்கின்றனர். இதன்மூலம் அதிகாரிகள் என்பவர்கள், பணபலம், ஆள் பலம் மிக்கவர்களுக்கானவர்கள் தான்; சாதாரண மக்களுக்கானவர்கள் அல்ல என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகளையும் அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருப்பதை, நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
இந்த உத்தரவின் நகலை அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கும்
வகையில், இதை தலைமைச் செயலாளருக்கு அனுப்ப தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதி, மக்களின் கோரிக்கை மனுக்கள் எந்த காரணமும் இன்றி நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு எனவும்
எச்சரித்தார்.