Egypt | 100 ஆண்டுகால மர்மத்திற்கு தீர்வு கண்ட விஞ்ஞானி.!! மன்னர்களின் சாபத்திற்கு பதில் என்ன.? விரிவான அறிக்கை.!!
Egypt: 1922 ஆம் ஆண்டு எகிப்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் பலர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் மர்ம முடிச்சுகளை கண்டுபிடித்து விட்டதாக ரோஸ் ஃபெலோஸ் என்ற விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார். இத்தனை நாள் வரை மன்னர் துட்டன்காமூனின் கல்லறையின் இழிவான சாபத்தால் அகழ்வாராய்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக கருதப்பட்டு வந்த நிலையில், அவரது கல்லறையில் இருந்து வெளியேறிய யுரேனியத்தின் கதிர்வீச்சு அளவு மற்றும் நச்சுக் கழிவுகளால் அகழ்வாராய்ச்சியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என கடந்த மாதம் ஜர்னல் ஆஃப் சயின்டிஃபிக் எக்ஸ்ப்ளோரேஷன் என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
3,000 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லறை மூடியிருப்பதால் மிக அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகிறது. இதனால் அந்தக் கல்லறை இருக்கும் இடத்தை நெருங்குபவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்துக்கு ஆளாகலாம் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது .
அகழ்வாராய்ச்சியாளர்கள் மரணமடைந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள ஃபெலோஸ் கதிரியக்கத்தன்மை மன்னன் துட்டன்காமுனின் கல்லறையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பரவி இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். சமகால மற்றும் பண்டைய எகிப்து மக்கள் எலும்பு/இரத்தம்/நிணநீர் போன்ற புற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முதன்மையான காரணம் கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகும் என்று ஃபெலோஸ் தனது ஆய்வில் எழுதி இருக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாக அதிக கதிர்வீச்சு அளவுகள் பழங்கால கல்லறை இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கதிர்வீச்சு எகிப்து(Egypt) நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் ஆவணப்படுத்தி இருக்கிறார். பிரமிடுகளை ஒட்டிய கிசாவில் உள்ள இரண்டு தளங்களில் கெய்கர் கவுண்டர் என்பவரால் கதிர்வீச்சு தன்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரேடான், கதிரியக்க வாயு, சக்காராவில் உள்ள பல நிலத்தடி கல்லறைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
பண்டைய எகிப்திய கல்லறைகளில் பல மடங்கு கதிர்வீச்சு இருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் நச்சுத்தன்மை பற்றி கல்லறை கட்டுபவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பான எச்சரிக்கை செய்திகள் கல்லறை சுவர்களில் எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சாபத்தின் தன்மை சில கல்லறைகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது என அவர் கூறுகிறார். இதற்கு உதாரணமாக ஒரு கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை மொழிபெயர்த்து பதிவிட்டு இருக்கிறார். அதில் இந்த கல்லறையை உடைப்பவர்கள் எந்த மருத்துவரும் கண்டறிய முடியாத நோயால் மரணத்தை சந்திப்பார்கள் என எழுதப்பட்டுள்ளது
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாபங்களின் பயம் இந்த பண்டைய இடிபாடுகளில் நீடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர் இது போன்ற தகவல்கள் பிரமிடுகள், பாரோக்கள் மற்றும் எகிப்து மீதான ஆர்வத்தை தூண்டுகிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
லார்ட் கார்னார்வோன் மர்மமான முறையில் இறந்தபோது இயற்கைக்கு அப்பாற்பட்ட சாபங்களின் பயம் தீவிரமடைந்தது. இவர்தான் 1922 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிக்கு நிதி அளித்தவர். மேலும் கல்லறைகளை திறந்து புதையல்களை கண்டுபிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்லறைகளுக்குள் நுழைந்த சில வாரங்களில் கார்னார்வோன் ரத்தத்தில் கலந்த விஷத்தன்மை மற்றும் நிமோனியாவால் மரணம் அடைந்ததாக ஃபெலோஸ் தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எகிப்தியலாஜிஸ்ட் ஆர்தர் வெய்கல் என்பவர் கல்லறைக்குள் நுழைந்த ஆறு வாரங்களுக்குள் கார்னார்வோன் இறந்துவிடுவார் என்று தனது சகாக்களிடம் கூறியதாக தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
கார்னார்வோனுடன் துட்டன்காமுனின் கல்லறைக்குள் நுழைந்த முதல் நபரான ஹோவர்ட் கார்ட்டர் என்பவரும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரத்த புற்று நோயால் 1939இல் இறந்தார். மேலும் பிரிட்டிஷ் எகிப்தியாலஜிஸ்ட் ஆர்தர் வெய்கல் என்ற அகழ்வாராய்ச்சியாளரும் 1934 இல் புற்றுநோயால் இறந்தார்.
கல்லறையின் சீல் அவிழ்க்கப்படும் போது இருந்த 26 பேரில் ஆறு பேர் மூச்சுத்திணறல், பக்கவாதம், நீரிழிவு, இதய செயலிழப்பு, நிமோனியா, நச்சுத்தன்மை, மலேரியா மற்றும் எக்ஸ்-ரே வெளிப்பாடு ஆகியவற்றால் பத்தாண்டுகளுக்குள் இறந்தனர் என்று நியூயார்க் போஸ்ட் ஆய்வை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
அகழ்வாராய்ச்சியாளர்கள் கல்லறையை திறக்கும் போது சில விசித்திர பல சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கிறது. இந்த நிகழ்வுகள் பலரது மரணங்களோடு தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது. கார்னார்வோன் கொசு கடித்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கல்லறையைத் திறந்தபோது கெய்ரோ நகரில் வினோதமான மின்சார தடை ஏற்பட்டு மிகப்பெரிய மணல் புயலை சந்தித்தது என நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் அறிக்கை தெரிவிக்கிறது. கார்னார்வோனின் விருப்பமான நாயும் ஒரு சிலிர்க்க வைக்கும் அலறல் சத்தத்தை கொடுத்து விட்டு இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கல்லறைகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களுக்கு எவ்வாறு விடை கொடுத்தார்கள் என்பதை உலகம் அறிய உதவியது. மேலும் எகிப்து நாட்டை பற்றிய வரலாற்று ஆய்வுகள் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள பெரிதும் உதவின. துட்டன்காமுனின் கல்லறைகளுக்குள் இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் திடமான தங்க காலணிகள்,சிலைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் விசித்திரமான விலங்குகள் உட்பட ஐந்தாயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழ்வாராய்ச்சியாளர்கள் புதையல் கல்லறையை அகற்ற கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எடுத்தனர். 18 வது வம்சத்தின் பண்டைய எகிப்திய மன்னரான துட்டன்காமன், கிமு 1332 முதல் 1323 வரை புதிய இராச்சிய காலத்தில் ஆட்சி செய்தார். அவர் இளம் வயதிலேயே அரியணை ஏறினாலும் 18 வயதிலேயே இறந்து விட்டார்.