For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

18 மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் ரத்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

05:03 PM May 03, 2024 IST | Mari Thangam
18 மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் ரத்து    உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முறையான இன சுழற்சி முறையைப் பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.மஞ்சுளா முன்பு இன்று நடைபெற்றது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, 'நியமனத்தில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை, அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட பிரிவைச்  சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்பட வில்லை,  எனவே பட்டியலை ரத்து செய்து, புதிய பட்டியலை அறிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து  நீதிபதி, கடந்த 2020 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். நான்கு  வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்று என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஏற்கெனவே பணிபுரிந்து வரும்  நான்கு அதிகாரிகள் பணி இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement