RG KAR: பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று தண்டனை...! குற்றவாளியின் தாய் எடுத்த முடிவு...!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சஞ்சய் ராயிக்கு எதிராக எங்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது அதை தற்கொலை என பெற்றோர்களிடம் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே அவரசர அவசரமாக கட்டட புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டது போன்ற சர்ச்சைகள் எழுந்தது.
இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கான தண்டனை விவரம் இன்று வழங்கப்பட உள்ளது.
தீர்ப்பு குறித்து குற்றவாளியின் தாய் கூறியதாவது; எனது மகனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் நீதிபதி வழங்கட்டும். நீதிமன்றம் அவரை தூக்கிலிடச் சொன்னாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன். என் மகன் குற்றவாளி என்றால், அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்றார்.
இது குறித்து சஞ்சய் ராயின் சகோதரி கூறியதாவது; எனது தம்பி செய்தது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. இந்த தவறை அவர் செய்திருந்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்னை போன்று ஒரு பெண். குற்றத்தையும் செய்திருந்தால், அதற்கான தண்டனையை அவன் அனுபவிக்கட்டும். இந்த உத்தரவுக்கு எதிராக எங்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.