மற்றொரு அதிர்ச்சி.. அலுவலக கழிப்பறையில் ஊழியர் மரணம்..!! பணிச்சுமை காரணமா?
தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பணிச்சுமை அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், இதனால் ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபகாலமாக, பல அலுவலகங்களில் பணிநேரங்களில் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புணேவில் பட்டயக் கணக்காளர் படித்து முடித்த பெண் பணி அழுத்தம் காரணமாக மரணமடைந்தார். அந்த சம்பவத்தை தொடர்ந்து, சில நாள்களில், லக்னௌவில் அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணமடைந்த சம்பவமும் நிகழ்ந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் அலுவலகக் கழிப்பறையில் ஊழியர் உயிரிழந்த மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒரு அலுவலகத்தில் மூத்த ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிதின் எட்வின் மைக்கேல் என்பவர், அலுவலக கழிப்பறைக்குள் சென்றுள்ளார். நேரமாகியும் பணியிடத்திற்கு எட்வின் வராததால், சக பணியாளர்கள் சந்தேகமடைந்து, கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோது, எட்வின் கீழே கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை உடனடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், எட்வின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகக் கூறினர். இந்த தொடர் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Read more ; விமர்சிப்பவர்களுக்கு நன்றி.. எனது பணியின் மூலம் உங்களுக்கு பதிலளிப்பேன்..!! – உதயநிதி அதிரடி பேச்சு