DMK | "கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் தரம் கெட்ட திமுக அரசு"… பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்.!
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி மற்றும் விஷம கருத்துக்களை பரப்பி வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் அவரது பதிவு குறித்து புகார் எழுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய சலீம் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை மாநில அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தனது வலைதளத்தில் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அண்ணாமலை திமுக அரசு செய்து வந்த அநியாயங்களை சமூக வலைதளங்களில் கேள்வி கேட்ட சகோதரர் மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என தெரிவித்து இருக்கிறார்.
போதை பொருள் விற்பவர்களுக்கும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக தங்களை விமர்சிப்பவர்களை வெளி மாநிலம் சென்றும் கைது செய்வது அவர்களது தரம் கெட்ட தனத்தை காட்டுகிறது என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான தமிழக காவல்துறையை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தி வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக விரோதிகளை விட்டுவிட்டு சமூக வலைதளத்தின் குரலை முடக்க திமுக அரசு முயற்சிப்பதாகவும் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.