ஆளுநர் விவகாரத்தில் சீறிப்பாய்ந்த அண்ணாமலை..!! ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட பரபரப்பு அறிக்கை..!!
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்ப ஆளுநர் மீது பழி சுமத்துவது திமுக அரசுக்கு வாடிக்கையாகி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள மக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று தமிழக ஆளுநர், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், திமுக அரசு அதனை மறுத்துள்ளது. இதனால், திமுக அரசுக்கு பின்வருவனவற்றை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அதாவது, நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், 1991ஆம் ஆண்டு வரை, சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் ஆளுநர், துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியை முடித்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு, 1971ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு செய்த பின்னரும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Read More : “ஆளுநர் யாராக இருந்தாலும் பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும்”..!! தவெக தலைவர் விஜய் பரபரப்பு பதிவு..!!