அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்..!! பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ்..!! தடையை மீறி நடத்தப்படுகிறதா..?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மேலும், கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மாணவி அளித்த புகாரின் பேரில், பதிவான எப்ஐஆரில் மாணவியின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் காவல்துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கு திமுக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பாமக மகளிர் அணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், காவல்துறையின் அனுமதியை மீறி அறிவித்தபடி போராட்டம் நடத்த பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்தும் பட்சத்தில், அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
Read More : 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!