அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்..!! திமுக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டில் செக் வைத்த அதிமுக..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மேலும், கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மாணவி அளித்த புகாரின் பேரில், பதிவான எப்ஐஆரில் மாணவியின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் காவல்துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கு திமுக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் கசிவு எப்படி நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி மாணவி பாலியல் வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது திமுக அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.