அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம்.. மாணவியின் விவரங்களுடன் F.I.Rயை வெளியிட்ட காவல்துறை..!! - சமூக ஆர்வலர்கள் கண்டனம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில், ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதேபோன்று 2011ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதானதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் தகவல்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் மாணவியின் பெயர் முகவரி உட்பட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்ணின் நலன் கருதி அவரது விவரங்களை காவல்துறை ரகசியம் காக்காதது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அவசரமாக ஆன்லைனில் எஃப்ஐஆர் காப்பியை பதிவேற்ற வேண்டிய அவசியம் என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Read more ; நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கீங்களா..? அதிலிருந்து விடுபட சூப்பர் டிப்ஸ் இதோ..!!