கைக்குட்டையில் மயக்க மருந்து..!! 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மர்ம நபர்..!! கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பகுதியில் தொழிலாளி ஒருவரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு கணிதத் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வு முடிந்ததும் மாணவி வழக்கம்போல் வீட்டிற்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பெருஞ்சிலம்பு பகுதியில் இறங்கியுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றுள்ளார்.
அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, திடீரென மாணவியின் முகத்தில் கைக்குட்டையை வைத்துள்ளார். இதனால், மாணவி மயங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து மாணவி கண் விழித்து பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்துள்ளார். ஆடைகள் கலைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தான், அந்த நபர் மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்ததில் தான் மயங்கியதும், தன்னை பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றதும் மாணவிக்கு புரிந்தது.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என பயந்த மாணவி, இதுபற்றி பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவின் தந்தை வேலை நிமித்தமாக குடும்பத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே குடிபெயர்ந்துள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மாணவியிடம் கேட்டபோது, தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். அதே சமயத்தில் மாணவி கர்ப்பமாக இருப்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.