பனையூரில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி திடீர் ஆலோசனை...! தந்தையை எதிர்க்க என்ன காரணம்...?
பாமக தலைவர் அன்புமணி, நேற்று முன்தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்களுடன், பனையூரில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை அக்டோபர் மாதம் ராமதாஸ் வழங்கினார். அடுத்த 3 மாதத்தில், அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டு தனது பதவியை தமிழ் குமரன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் வானூர் அருகே பட்டானூரில் பாமக சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் நிறுவனர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா ? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும் ? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், `யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.” என்றார். அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. இதைத் தொடர்ந்து அடுத்த நாளை ராமதாஸ் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் அன்புமணி. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
இந்த மோதலுக்கிடையே கட்சியின் தலைவரான அன்புமணி, நேற்று முன்தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்களுடன், பனையூரில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை புதிய பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் முகுந்தனும் தனக்கு பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், அவருக்கு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி அன்புமணி தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த மோதலுக்கு முக்கிய காரணம், அன்புமணியின் மருமகனுக்கு எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும் என்பதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது. அன்புமணியின் சகோதரி ஸ்ரீகாந்திக்கு சுகந்தன், முகுந்தன், ப்ரீத்திவன் என 3 மகன்கள் உள்ளனர். அதில் ப்ரீத்திவனுக்குத்தான் அன்புமணியின் மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் தனது மருமகனுக்கு முகுந்தன் போட்டியாக வருவாரோ என்ற அச்சத்தில்தான் அன்புமணி, ராமதாசின் முடிவை எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் தற்காலிகமாக முகுந்தனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை முகுந்தனும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.