திருச்சி : திடீர் தொழில் நுட்ப கோளாறு.. 2 மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம்..!! 144 பயணிகளின் நிலை என்ன?
திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் இரண்டு மணி நேரமாக வானிலேயே வட்டமடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் விமான போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றுகிறது. இங்கிருந்து சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மலேசியா, துபாய் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு சுமார் 50 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது அங்கு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு இன்று மாலை 5:40 மணிக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் டயர்கள் விமானம் வானில் பறக்க தொடங்கிய பிறகும் உள்ளிழுத்துக் கொள்ளாமல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. அதனைக் கண்டறிந்த விமானிகள் மீண்டும் அந்த விமானத்தைத் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சி செய்தனர்.
ஆனால் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதன் காரணமாக விமானத்தைத் தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்து வருகிறது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்படுகிறது.
Read more ; கணவன்-மனைவி இடையே தகராறு இருந்தால் பாலியல் ஆசைகள் எப்படி நிறைவேறும்? – அலகாபாத் உயர்நீதிமன்றம்